நல்லாட்சியை முன்னெடுக்க தொடர்ந்தும் அமெரிக்கா ஒத்துழைக்கும் – ஜனாதிபதியிடம் அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு

102 0

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவி சாய்க்கும் நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதுவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

‘நெருக்கடியான கால கட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.

இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறு உருவாகின என்பது தொடர்பிலும் , சுபீட்சமான எதிர்காலமொன்றை நோக்கிச் செல்வதற்கு எவ்வாறு இரு நாடுகளும் இணைந்து பயணிக்க முடியும் என்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடினோம்.

எமது நாடும், நாட்டு மக்களும் 70 ஆண்டுகளாக இலங்கையுடன் நட்புறவைப் பேணி வருகின்றன.அதற்கமைய மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் நல்லாட்சியை இலங்கையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமெரிக்க தூதுவர் , ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.