இ.தொ.கா வின் முடிவு எதிர்கால அரசியல் பயணத்துக்கு வலுவூட்டுமா ?

168 0

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கு ரணிலுக்கு ஆதரவை வழங்குவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல குழப்பங்களுக்கு மத்தியிலேயே தனது முடிவை அறிவித்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய சிறுபான்மை கட்சிகளில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே கட்சி இ.தொ.கா மாத்திரமே.

மலையக மக்களின் அதிக பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கக் கூடிய தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித்து அணியினர் ஆதரவளித்த டலசுஸ்கே தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதொன்று. கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் தனித்துவத்தை பேணுதல் என்ற அரசியல் கலாசாரத்துக்கேற்ப அவரவர் தனித்தனியாக அறிக்கைகளை பின்பு விடுத்தனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலை திரிசங்க சொர்க்க நிலையிலேயே இறுதி வரை இருந்தது. ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திலிருந்து விலகி தனித்துவம் பேணுகிறோம் என்று இ.தொ.கா கூறி வந்தாலும், அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்பிலேயே இருந்தனர். அது அமரர் ஆறுமுகன் மஹிந்த மீது வைத்திருந்த விசுவாசத்தின் வெளிப்பாடாகும். மேலும் கோட்டாபயவுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்ளும்படி மஹிந்த தரப்பினராலேயே இ.தொ.காவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கலாம். ;

பின்பு ரணில் விக்ரமசிங்க பிதரமரானவுடன் அவருடனும் பேச்சுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. கோத்தாபாய நாட்டை விட்டுச்சென்றதும் ரணில் இடைக்கால ஜனாதிபதியாகி விடுவார் என்ற நம்பிக்கையே அனைவரிடத்திலும் காணப்பட்டது. அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு பொது ஜன பெரமுனவினருக்கு கட்டளை இடப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் மஹிந்த மற்றும் பஸில் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். ஏனென்றால் மஹிந்த தரப்பினரையும் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் கோத்தாபயவையும் காப்பாற்றுவதற்கு ரணிலைத் தவிர மஹிந்த அணியினருக்கு வேறு எந்த தெரிவுகளும் இருக்கவில்லை.

ஆகவே ரணிலுக்கு ஆதரவளிப்பதையே இ.தொ.காவும் தமது முடிவாகக்கொண்டிருந்தது. ஆனால் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு ஒரு நாள் இருக்கையில் சஜித் தனது முடிவை அறிவித்ததும் இ.தொ.காவினர் குழம்பிப்போயினர்.

இ.தொ.காவுக்கு நுவரெலியா மாவட்டத்தில் இருப்பது இரண்டே இரண்டு உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்ற விடயமே அவர்களின் எதிர்கால அரசியல் பயணத்தை தீர்மானிப்பதாக அமையும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் ஏற்பட்ட போது, அமரர் ஆறுமுகன் அதை சமயோசிதமாக கையாண்டிருந்தார். ஆனால் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானோ இதில் தனது அனுபவமின்மையை உணர்ந்து கொண்டார். மற்றுமொரு உறுப்பினரான ராமேஷ்வரனும் பாராளுமன்றத்துக்கு புதியவர் என்பதோடு தேசிய அரசியல் நகர்வுகள் பற்றியோ அது குறித்த தீர்க்கதரிசனங்களையோ கொண்டிராதவர்.

ஆகவே பல்வேறு தரப்பினருடன் இவர்கள் பேச்சு நடத்த வேண்டியதாயிற்று. குறித்த தரப்பினரின் பலரும் ரணிலை தெரிவு செய்யும்படி கூற சில இ.தொ.கா உறுப்பினர்கள் டலசுக்கு ஆதரவளிக்கக் கூறியிருந்தனர். இதற்குக் காரணம் கூடிய அளவான சிறுபான்மை கட்சிகள் டலஸ் பக்கமே இருந்தன. நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிய மொட்டு கட்சி உறுப்பினர்களே ரணிலின் பக்கம் இருந்தனர்.

ஒரு சில உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவளிக்காது நடுநிலைமையைப் பேணும்படி கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால் ஏற்கனவே ரணிலின் ஆதரவை கோரி பேச்சு நடத்தியிருந்த இ.தொ.கா இறுதியாக ரணிலுக்கு ஆதரவை வழங்க முடிவு செய்திருந்தது.

ஆனாலும் அவர்களின் மனதில் இறுதி நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருந்தது. எனினும் ரணில் மிக இலகுவாக வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இ.தொ.கா ஆதரவளித்ததால் ரணில் வெற்றி பெறவில்லை. வெற்றி பெற்ற ரணிலின் பக்கம் இவர்கள் இருக்கின்றனர் அவ்வளவு தான். அதை வைத்துக்கொண்டு அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனைய பெருந்தோட்டப்பகுதி மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் பகுதிகளில் தமது பழைய அதிகாரங்களை காட்டுவதற்கு முயற்சிக்கக் கூடாது.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக இவர்கள் சற்று நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டியதாகவுள்ளது. கோத்தபாயவுடன்  இருந்த இரண்டரை வருடங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு புதிதாக எந்த அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை. நல்லாட்சி காலத்து திட்டங்களை பூர்த்தி செய்து இவர்கள் திறந்து வைத்தனர் .

மலையக சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகிய பிரதான மூன்று அடிப்படை விடயங்களிலும் கோத்தாபாய அக்கறை செலுத்தவில்லை. தொழிலாளர்களின் நாட் சம்பள விவகாரத்தில் முடிவு காணப்படவில்லை. ஆகவே இந்த விடயங்களை இன்று மலையக சமூகத்தின் மனதில் வேரூன்றி போயுள்ளன.

இ.தொ.கா ஒரு அமைச்சுப்பதவியைப் பெற்றால்,அதற்கு நிதி ஒதுக்கும் அளவிற்கு அரசாங்க திறைசேறியில் பணம் இல்லை. கெளரவத்துக்காக அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு வாகனங்களில் வலம் வருவதில் மீண்டும் மக்கள் எதிர்ப்பையே சம்பாதிக்க நேரிடும் என்பதை இ.தொ.கா புரிந்து கொண்டால் சரி.

அதை விட அடுத்து வரும் பொதுத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி தேர்தல்களில் ரணில் கூறும் சின்னத்திலேயே இவர்கள் போட்டியிட வேண்டி வரும். ரணிலின் பக்கம் இருப்பதோ மக்கள் வெறுப்புணர்வுக்கு ஆளாகியிருக்கும் ; மொட்டு கட்சி உறுப்பினர்கள். அந்த கட்சியின் பெயரில் மீண்டுமொரு தேர்தலில் மஹிந்த அணி உறுப்பினர்கள் தேர்தலொன்றுக்கு எப்படியும் முகங்கொடுக்கப்போவதில்லை. அந்தப் பெயரோடு அவர்கள் மக்கள் மத்தியிலும் செல்ல முடியாது.

ஜனாதிபதி ரணில் தனது ஐ.தே.காவை மீள கட்டியெழுப்பப்பார்ப்பார். அதற்கான கூட்டணி ஒன்றை அமைத்து புதிய சின்னத்தில் போட்டியிடவே முயற்சி செய்வார். ஆனால் மலையக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே?

ரணில் போன்றதொரு அரசியல் சாணக்கியருடன் பயணம் செய்யும் அளவுக்கு தற்போதைய இ.தொ.கா உறுப்பினர்கள் இருவருக்குமே அரசியல் அனுபவம் இல்லை. மேலும் தன்னுடன் இருப்பவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர் ரணில். நல்லாட்சி காலத்திலும் பின்பு வந்த உள்ளூராட்சி தேர்தல்களிலும் ரணிலை மிக மோசமாக விமர்சித்தவர்கள் இ.தொ.காவினர். அரசியலில் இதெல்லாம் சகஜம் என இ.தொ.கா நினைத்தாலும் ரணில் அப்படியான அரசியல்வாதி இல்லையே

இ.தொ.காவானது அதன் கடந்த கால செயற்பாடுகளினால் நுவரெலியா மாவட்டத்தில் கனிசமான ஆதரவை இழந்துள்ளது என்பது வெளிப்படை. கட்சியின் சில உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் , உறுப்பினர்களின் செயற்பாட்டால் மக்கள் மனதில் வெறுப்புகள் அதிகரித்துள்ளன. கட்சித் தலைமை அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தாலும் சிலர் இன்னும் அதிகார போக்குடனும் தமதிஷ்டப்படியும் நடந்து வருவதை முழு சமூகமுமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.

மலையக நகரப்பகுதிகளில் வர்க்க சமூகத்தினருடான தொடர்புகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் முற்றாக தவிர்த்திருக்கின்றார். கட்சியின் ஆரம்ப கால சிரேஷ்ட உறுப்பினர்களையும் தவிர்த்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது இ.தொ.காவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

ஆகவே தமது எதிர்கால அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு மலையகத்தின் பாரம்பரிய கட்சியான இ.தொ.கா இனி தான் பல போராட்டங்களுக்கு முகங்கொடுக்கப்போகின்றது.

எனவே சிந்தித்து செயற்பட வேண்டிய தருணத்தில் இ.தொ.கா உள்ளது. அமைச்சுப்பதவியைப் பெற்று சில வருடங்கள் அதில் இருப்பதிலும் பார்க்க , பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அடுத்த ஐந்து வருடங்களுக்கு பாராளுமன்றில் இருக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலேயே அதன் அரசியல் வியூகங்கள் இருக்க வேண்டும்.

தேசியன்