சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பியவருக்கு விளக்கமறியல்

353 0

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி பிரதேசத்தில் வைத்து 28 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் தென் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பேஸ்புக்கில் அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த கருத்தை முதலில் வெளியிட்ட நபர் மற்றும் அதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.