ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

259 0

பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதரமாக விளங்கி வருவது பவானிசாகர் அணை. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பட்டு வந்தன.

ஆனால் இந்த ஆண்டோ பருவமழை பொய்த்து விட்டதால் எதிர்பார்த்த அளவு கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள் காய்ந்து வருகிறது. தண்ணீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி போய் விட்டன.

பவானிசாகர் அணையில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து மிகமிக குறைந்து விட்டது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரமாக 45 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 42.50 அடியாக உள்ளது. பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே இப்படி என்றால் இனி போகப்போக என்னவாகுமோ… என பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இப்போது பகலில் வெயிலின் காட்டம் அதிகம் உள்ளது. இந்த வெப்ப சலனத்தால் இந்த ஆண்டு கோடை மழை கைக்கொடுக்குமா? என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர் மக்கள்.