சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

260 0

பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). பண்ருட்டி ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் இருந்த காட்சியையும், அதன் பின்னர் கட்டாயப் படுத்தியதால் முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சியையும் அவர் பார்த்தார்.

இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி அனிதா, மகன் அருள்ஜோதி ஈஸ்வரன், மகள்கள் அக்கினிபிரியா, நிஷாந்தி ஆகியோருடன் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்து ஆட்டோவில் கிளம்பினார்.

பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகே வந்தார். அப்போது அவர் தனது கையில் மண்எண்ணெய் கேன் வைத்திருந்தார்.

திடீரென்று அவர், “புரட்சித்தலைவர் வாழ்க, புட்சித்தலைவி அம்மா வாழ்க” என்று கோ‌ஷமிட்டார். பின்னர் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் கோ‌ஷம் எழுப்பினார்.

இதையடுத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை அங்கிருந்தவர்கள் தடுத்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலகிருஷ்ணனிடம் பேசினர். பின்னர் பாலகிருஷ்ணனையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீதிமன்ற வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறைக்கு சென்றபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவரே முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டும். சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது எனக்கு மிகவும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியது. சசிகலா முதல்-அமைச்சராக வரக்கூடாது. இதை வலியுறுத்தி நான் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.