மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி தென்மாநிலம் முன்சன் 23.7.2022

1568 0

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் கொறோனா விசக்கிரிமிகளின் தாக்கத்தின் பின்பு இந்தவருடம் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் யேர்மனியின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து முன்சன் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் சென்ற சனிக்கிழமை 23.7.2022 அன்று மிகச்சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனியத் தேசியக் கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு பின்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கும் மக்களுக்குமான அகவணக்கம் செய்யப்பட்டது.

பின்பு1983 யூலை 23 சிறிலங்கா இனவாத அரசினால் தமிழீழமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு யூலையை நினைவுபடுத்தி போட்டிகள் ஆரம்பிற்பதற்கு முன்பதாக கறுப்பு யூலையில் இனப்படுகெலை செய்யப்பட்ட மக்களுக்கான சுடர் மற்றும் மலர் வணக்கத்தை போட்டியாளர்களும் வருகைதந்திருந்த மக்களும் செலுத்தினார்கள். பின்பு கறுப்பு யூலை நினைவுப் பகிர்வும் மிக உணர்வு பூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்சன் தமிழாலய மாணவ மாணவிகளால் மைதானத்தில் பிரத்தியோகமான அணிவகுப்பு நடாத்திக் காண்பித்ததுடன் தமிழீழத் தேசியச் சின்னங்களான தேசியப்பூவாகிய காந்தள் மலரினையும், தேசிய மரமாகிய வாகை மரத்தினையும். தேசிய விலங்காகிய சிறுத்தைப் புலியையும், தேசியப் பறவையாகிய செம்பகத்தையும் காட்சிப்படுத்தி தமிழீழமக்களின் தேசிய அடையாளங்களை எமது சிறர்கள் மனங்களிலும் மக்களின் மனங்களிலும் பதிவுசெய்தனர்.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தினை வீர வீராங்கணைகள் மைதானத்தைச் சுற்றிக் கொண்டுவந்து ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணமும் எடுத்துக் கொண்டார்கள். பின்பு அணிவகுப்பு நடைபெற்றது அணிவகுப்பில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தேசியக்கொடிகளைக் கடந்துபோகும் போது தமது மரியாதையைத் தேசியக் கொடிகளுக்கு கொடுத்த காட்சி பார்வையாளர்களுக்கு கம்பீரத்தை உருவாக்கியது.

தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன் நடுவிலே போட்டிகளில் கலந்துகொள்ளாத நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப் போட்டி மைதானத்தின் மத்தியபகுதியில் நடாத்தப்பட்டது. இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபற்றி குதூகலமடைந்தனர். பேட்டியில் பங்குபற்றிய ஒருவயதுக் குழந்தையை பெற்றோர் தாங்கிவந்து இலக்கை அடைந்த காட்சி பசுமையாக இருந்தது. பங்கு பற்றிய அனைத்துக் குழந்தைகளுக்கும் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் இனிப்புப் பண்டங்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில்.

முதலாமிடத்தை முன்சன் தமிழாலயமும்
இரன்டாமிடத்தை ருட்லிங்கன் தமிழாலயமும்
மூன்றாமிடத்தை ஸ்ருற்காட் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.

தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளானது வடமத்திய மாநிலத்திற்கான போட்டிகள் 20.08.2022 ஆர்ன்ஸ்பேர்க் (Arnsberg) நகரத்திலும், மத்திய மாநிலத்திற்கான போட்டிகள் 27.8.2022 வில்லிச் (Willich) நகரத்திலும் நடைபெறவிருக்கின்றது.