சோமாலியா முன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு

258 0

சோமாலியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் பிரதமராக இருந்த முகமது அப்துல்லாஹி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோமாலியா நாட்டில் அதிபரை தேர்வு செய்வதற்காக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சோமாலியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோமாலியா-அமெரிக்கா இருநாட்டு குடியுரிமை பெற்ற முகமது அப்துல்லாஹி அதிபராவதற்கு ஆதரவாக வாக்களித்து புதிய அதிபராக தேர்வு செய்தனர்.

தலைநகர் மொகதிஷூவில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. நாட்டின் மற்ற பகுதிகள் பாதுகாப்பு இல்லை என்பதால், இந்த இடம் வாக்கெடுப்பிற்காக தேர்வு செய்யப்பட்டது. இருந்த போதும், வாக்கெடுப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

அப்துல்லாஹிக்கு 184 வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்த தற்போதைய அதிபர் முகமுத்துக்கு 97 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அவரும் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு, மூன்றாவது சுற்று வாக்கெடுப்பை தவிர்த்துவிட்டார்.

முதற்கட்டமாக 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதற்கட்ட வாக்கெடுப்பிற்கு பிறகு 3 போட்டியாளர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது.

சோமாலியா, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது. சோமாலியாவில் 1969-ல் இருந்து ஒருவருக்கு ஒருவாக்கு என்ற நிலை இல்லை.