சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
வியட்நாம், சிங்கப்பூரைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவும் தன்னுடைய பலத்தை கூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேலும் சீனாவின் அச்சுறுத்தலை தடுக்க அண்டை நாடுகளுடன் தனது கூட்டு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேசியா இடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-இந்தோனேசியா இடையே ஏற்கனவே கப்பற்படை கூட்டு பயிற்சி நடத்தப்படும் நிலையில், சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
பாதுகாப்பு அமைச்சக வட்டாரத் தகவலின்படி, இந்தோனேசிய மாலுமிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தோனேசிய பயணம் மேற்க்கொண்ட இந்திய பாதுகாப்பு இயக்குநர் ஜி மோகன் குமார் அதற்கான புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு வியட்நாமைச் சேர்ந்த கப்பற்படை மற்றும் மாலுமிகள் இந்தியா வந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. விஷாகப்பட்டினத்தில் இயங்கும் இந்திய கப்பல் பயிற்சிப்படை பள்ளியில் இருநாடுகளும் இணைந்து பயிற்சியும், ஒத்திகையும் மேற்கொண்டனர்.
வியட்நாமுடன் இந்திய ராணுவம், தொழில்நுட்பம், கூட்டுப்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், இந்தோனேசியாவுடன் இணைந்து இந்தியா பாதுகாப்பை கூட்டுபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு கூட்டுபயிற்சியை `கருடா சக்தி’ என்று அழைக்கின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு இருநாடுகளுக்கிடையே இந்த கூட்டுப்பயிற்சி நடைபெற்றது.
இருநாட்டு கப்பற்படையும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடல் எல்லையில் கடந்த 2002-ஆம் முதல் ஆண்டுக்கு இருமுறை பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சிங்கப்பூர் இணைந்து 2007, 2008-ஆம் ஆண்டுகளில் சிறப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதன்படி இருநாடுகளுக்கிடையேயான கூட்டுப்பயிற்சி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

