நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்: ஓ.பன்னீர்செல்வம்

275 0

எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது’ என்றும், ‘நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

‘எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது’ என்றும், ‘நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தந்தி டி.வி.க்கு கேள்வி-பதில் மூலம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- கவர்னரிடம் கொடுக்கப்பட்ட உங்களது ராஜினாமாவை ‘வாபஸ்’ பெறுவீர்களா?

பதில்:- ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்ற வாதத்துக்கு உள்ளே நான் செல்லவில்லை. எந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தை (ராஜினாமா) கொடுத்தேன் என்பதற்கு சரியான விளக்கத்தை அம்மா நினைவிடத்தில் விளக்கமாக சொல்லிவிட்டேன். அவரது எண்ணங்கள் மனநிறைவு பெறும் வகையில் நான் பணியாற்றிய காரணத்தினால் 13 வருடங்கள் கழித்தும் எனக்கு 2-வது முறையாக அம்மாவுக்கு சோதனை வந்த காலத்தில் இந்த பொறுப்பை எனக்கு தந்தார்கள் என்ற மனநிறைவு இருக்கிறது.

கேள்வி:- உங்கள் பின்னணியில் தி.மு.க. செயல்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- எந்த அடிப்படையில் அந்த குற்றச்சாட்டை வைத்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் எந்த தொழிலிலும் தி.மு.க.வுடன் இணக்கமாக சென்றது இல்லை. அனைவருக்கும் சரித்திரத்தை பின்னோக்கி சென்று பார்த்தால் நன்றாக தெரியும்.

நாங்கள் எதிர்க்கட்சியாகவும், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த நிலையில் மிடாஸ் என்ற மதுபான ஆலைக்கு யார் அவர்களிடம் (தி.மு.க.) சென்று மதுபானங்களை அதிகமாக கொள்முதல் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும்.

எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது. நானும் மு.க.ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்ததாக கூறி இருக்கிறார். மனிதனுக்கு மனிதர் அன்பு பாராட்டும் வகையில் அவர் சிரித்தால் நாம் சிரிக்கவேண்டும், அவர் புன்முறுவல் கொடுத்தால் நாம் புன்முறுவல் கொடுக்கவேண்டும். இதுதான் மனித பண்பு.

இந்த அடிப்படை தெரியாமல் கூடவா அம்மாவால் நான் இங்கு அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறேன், இது வியப்பாக இருக்கிறது. மனிதனுக்கும், விலங்குக்கும் வேறுபாடு சிரிப்பது தான். விலங்குக்கு சிரிக்க தெரியாது. மனிதர்களுக்கு தான் சிரிக்க தெரியும்.

கேள்வி:- உங்களை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, அப்பொறுப்புக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளாரே? அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்:- ஏற்கனவே சட்ட பிரச்சினை இருக்கிறது. கட்சிக்கு ஒரு அசாதாரண சூழல் ஏற்படும் போது, தற்காலிகமாக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் பொதுச்செயலாளரை நாம் தேர்ந்தெடுத்தோம். அது கட்சியின் நடைமுறை. பொதுச்செயலாளர் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றவர் என்ற நிலை எப்போது வரும் என்றால், எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கும்போது கழக சட்டவிதியின் படி, கழக அடிப்படை உறுப்பினர் அனைவரும் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற போது தான். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளருக்கு தான் கழக உறுப்பினர்களை நியமிக்கவும், நீக்குவதற்கும் உரிமை இருக்கிறது. அந்த கோணத்தில் பார்த்தால் நீங்களே இந்த முடிவை பற்றி தெரிந்துகொள்வீர்கள்.

கேள்வி:- முதல்-அமைச்சர் பதவிக்கான உரிமையை கவர்னரிடம் கோருவீர்களா?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் இருக்கிறது. எனவே, அவர்கள் யாரை கைகாட்டுகிறார்களோ அவர்கள் தான் முதல்-அமைச்சராக முடியும். மக்கள் இன்னொரு முறை வாக்களிக்கும் நிலை ஏற்படவில்லையே?.

பதில்:- சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து, ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு, ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்து கட்டுப்பாட்டோடு இயக்கத்தை நடத்தினார்களோ அவை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அதே கட்டுப்பாட்டோடு அவர்கள் மனசாட்சிப்படி நடந்தால் நான் மீண்டும் முதல்-அமைச்சர் என்று பதவியேற்கும் நல்ல சூழல் உருவாகும். இதை நான் அவர்களுக்கு வேண்டுகோளாகவே விடுக்கிறேன்.

கேள்வி:- 131 எம்.எல்.ஏ.க்கள் அவர்களது பக்கம் ஆதரவாக இருக்கும்போது, உங்கள் பக்கம் குறைந்தது 25 சட்டமன்ற உறுப்பினர்களாவது வந்திருந்தார்கள் என்றால், அவர்களுடைய கூற்று கேள்விக்குறி ஆகியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?.

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- முதல்-அமைச்சரின் முயற்சி தனிக்கட்சி அல்ல என்று புரிந்துகொள்ளலாமா?.

பதில்:- உறுதியாக.

கேள்வி:- உண்மையான அ.தி.மு.க. உங்கள் தலைமையில் தான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?.

பதில்:- உண்மையான அ.தி.மு.க., ஜெயலலிதாவினுடைய அ.தி.மு.க. உறுதியாக நல்லவர் பக்கம் இருக்கும். அதற்குரிய சாதகமான சூழ்நிலை உருவாகும்.மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.