இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நாடுகளை மையப்படுத்தி செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களே இந்தச் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளன. அதேநேரம், சர்வதேச நீதிமன்றத்தினை நடுவதற்குரிய நடவடிக்கைகள் சில புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டிணைந்து முன்னெடுக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் பிறிதொரு நாட்டில் தஞ்சமடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறன நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, நாடொன்றின் ஜனாதிபதிக்கு காணப்பட்ட சிறப்புரிமைகளை அவர் இழந்துள்ள நிலையிலும், தென்னிலங்கை மக்களாலும் வெறுத்து விரட்டியடிக்கப்பட்ட நிலையிலும் சர்வதேச தரப்புக்களை உள்ளீர்த்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தப் புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
குறிப்பாக, இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுடன் தொடர்பு பட்டமை ஆகிய விடயங்களை மையப்படுத்தியே வழக்குக்களை தாக்கல் செய்வதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கோட்டாபய சிங்கப்பூரை விட்டு வெளியேறும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது .