மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் – கத்தோலிக்க ஆயர் பேரவை

327 0

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து , மனித உரிமைகளை மீறும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளானது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்களில் அங்கிருந்த அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களும் , இளைஞர்களும் , உள்நாட்டு – வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிராயுதபாணிகளான சிவில் பிரஜைகள் மீதும் , ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களை கத்தோலிக்க ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிருக்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது இவ்வாறான அடக்கு முறைகளை பிரயோகித்து , மனித உரிமைகளை மீறும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளானது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு காணப்படும் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களானது ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும்.

எனவே அரசியலமைப்பில் சகல பிரஜைகளுக்கும் உரித்தாக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதாக வழங்கி உறுதிமொழியை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படை தன்மையான விசாரணைகளை முன்னெடுப்பதோடு , அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.