விமானம் கடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், பல்வேறு பங்குதாரர்களால் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அறிந்துகொள்ளவும், செயல்திறன் மற்றும் தயார்நிலையை சோதிக்கவும், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகையானது சென்னை விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்டது.
விமான நிலைய குழுத் தலைவரும், தமிழக உள்துறை கூடுதல் செயலாளருமான எம் முருகன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. காவல்துறை, தொழிலக பாதுகாப்பு படை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் ஆணையம், பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர். ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக அதில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் விமான நிலைய குழுத் தலைவர் முருகன், சென்னை விமான நிலைய இயக்குனர் ஷரத் குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

