வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்துக்கு யாரை நியமிப்பது ? கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானிக்கும்- ரங்கே

75 0

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விரைவாக ஒருவரின் பெயர் அறிவிக்கப்படும்.

அதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனைக்கமைய கட்சியின் முகாமைத்துவ குழு கூடி தீர்மானிக்க இருக்கின்றது என கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகும் அந்த ஆசனத்துக்கு நியமிக்க இருக்கும் உறுப்பினர் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020 ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

என்றாலும் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

என்றாலும் நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்து மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகியதைத்தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

அதனைத்தொடர்ந்து கோத்தாபய ராஜபக்ஷ் பதவி விலகியதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குரிய ரணில் விக்ரமசிங்கவின் ஆசனம் வெற்றிடமாகி இருக்கின்றது.

இந்த வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பதென்று இதுவரை தீர்மானிக்கவில்லை. என்றாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் அடிப்படையில் கட்சியின் முகாமைத்துவ குழு கூடி விரைவாக ஒருவரை பாராளுமன்றத்துக்கு பெயரிட நடவடிக்கை எடுப்போம் என்றார் .