ரணிலுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா தீர்மானம்

176 0

இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது வாக்குகளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சிறந்த தீர்வாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்கவிற்கு இ.தொ.கா தனது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இன்று பாராளுமன்றில் இடம்பெறவள்ள புதிய ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவை பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் மேற்கொண்ட தீர்மானத்தின் படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று (20) நடைபெறவுள்ளது.

இதற்காக பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.