இலங்கையில் பெருமளவான மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் அடைந்திருக்கும் மாபெரும் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் உலகத்தமிழர் பேரவை, மிகுந்த தைரியத்துடன் இந்த மாற்றத்திற்குத் தலைமைதாங்கும் சாதாரண மக்களுடனான தமது ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி தவறான பொருளாதார நிர்வாகத்திற்காக மாத்திரமன்றி 2005 – 2009 வரையான காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் பல ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்காகவும், 1989 இல் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்காகவும் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.
‘நாட்டின் தோற்றம்பெற்ற பொருளாதார நெருக்கடி இத்தகைய முற்போக்கான அரசியல் குழுவொன்று கூட்டிணைவதற்கு வழிவகுத்ததுடன், அந்தக் கூட்டிணைவு அமைதியான முறையில் மிகவும் புரட்சிகரமானதொரு வெற்றியை அடைந்துகொண்டிருக்கின்றது.
இந்தத் தருணம் சுதந்திரத்தின் பின்னர் மீண்டும் இலங்கை அடைந்திருக்கும் மறுபிறப்பாகும்’ என்று பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கும் புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத்தமிழர் பேரவை அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியதும், அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததும் மிகமுக்கியமான நகர்வுகளாகும் என்றும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் என்று சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் உலகத்தமிழர் பேரவை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
‘தவறான பொருளாதார நிர்வாகத்திற்காக மாத்திரமன்றி 2005 – 2009 வரையான காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் பல ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்காகவும், 1989 இல் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்காகவும் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்’ என்று மேற்படி புலம்பெயர் தமிழர் அமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய பிரதிநிதிகளின் பங்களிப்புடனான இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதுடன் அதனைத்தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை முன்னிறுத்தி பொதுத்தேர்தலை நடாத்துவதன் மூலம் ஸ்திரமான, ஜனநாயகத்தன்மை மிகுந்த, பொறுப்புக்கூறத்தக்க, அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிறுவப்படும் வரையில் இத்தகைய மாற்றத்தை நோக்கிய போராட்டங்கள் அமைதியானதும் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதுமான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
‘தற்போதைய சூழ்நிலையில் ஸ்தாபிக்கப்படக்கூடிய புதிய அரசாங்கம் மிகவும் சவாலான சில பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றது. குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச பொதுநிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனான் கடினமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அவசர நிதியுதவிகளைக் கோரவேண்டும்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடியின் விளைவாக பொதுமக்கள் ஏற்கனவே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும் பாதிக்காத வகையில் வலுவான பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருக்கும் உலகத்தமிழர் பேரவை, புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக மாத்திரம் அமையாமல், சமூகத்திலுள்ள அனைத்துத்தரப்பினரையும் உள்வாங்கும் வகையில் அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

