கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துடனேயே டலஸின் பெயரை முன்மொழிந்தேன் – பீரிஸ்

234 0

எமது கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பத்துடனே டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தோம். அத்துடன் கட்சியின் செயலாளரிடம் இதுதொடர்பில் 6 கேள்விகளை கேட்டிருந்தேன் இதுவரை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆறு கேள்விகளை பொதுஜன  பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரிய வசத்திடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலையும் வழங்கவில்லை.

நான் தெரிவித்துள்ள கருத்தை அவர் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் நிராகரிப்பதற்கு நான் கருத்து தெரிவிக்கவில்லை. கேள்விகளையே கேட்டிருந்தேன். இதுவரை அவர் அதற்கு பதில் வழங்கவில்லை என்பதே உண்மை.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை கட்சிக்குள் நடந்தது என்று அவர் கூறியுள்ளார். அவ்வாறானால் அது எப்போது நடந்தது? யாரெல்லாம் அதில் கலந்து கொண்டார்கள்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு அவர் இன்னும் பதில் வழங்கவில்லை என்றார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெரும தெரிவு செய்யப்பட்டுள்ளமை உங்கள் கட்சியின் தீர்மானமா அல்லது தனிப்பட்ட தீர்மானமா என கேள்வியெழுப்பினார்,

அதற்கு பதிலளிக்கையில்,

இல்லை, எமது கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பத்துடனே டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தோம். நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்த்தே நாம் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும். மக்கள் கருத்தே பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும்.

தற்போது நாட்டு மக்களின் கருத்து என்னவென்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர். அதற்கு இது சிறந்த ஆரம்பமாக முடியும். புதுவிதமாக இந்த நாட்டை நிர்வகிக்க கூடிய வேலைத் திட்டங்கள் அவசியம். அதுவே மக்களின் தேவையும் அவசியமாகவும் உள்ளது. அதற்கு அமையவே நாம் பாராளுமன்றத்தில் செயல்பட வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் கட்சி தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இல்லை சிலர் வேறு கருத்துகளில் உள்ளனர். இது சாதாரணமாக கட்சிகளில் இருக்கக்கூடிய நிலைமைதான்.
.
கேள்வி ; சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதற்கு நீங்கள் விருப்பமா?

பதில் ; ஆம், விருப்பம். முழு நாடும் அதைத்தான் எதிர்பார்க்கின்றது.

பல பிரிவுகளாக பிளவு பட்டு நாட்டை ஆட்சி செய்யும் கலாசாரம் தோல்வி யடைந்துள்ளது. அந்த வகையில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே அவசியமாகவுள்ளது. ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களே காலத்தின் தேவையாக இருக்கின்றன என்றார்.