விமலுக்கு எதிரான ரூ. 75 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

235 0

சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்த்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை மையப்படுத்திய வழக்கை, ‘வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு ‘ (pre trial conference) திகதி குறித்து கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதிக்கு அதனை ஒத்தி வைத்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இன்று (18) இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குறித்த வழக்கை முன்னெடுத்து செல்ல போதுமான சான்றுகள், சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என செப்டம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலில் ஆராயப்படவுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதாவது 2009 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சம்பாதிக்கப்பட்ட வழி முறையை வெளிப்படுத்த முடியாத வகையில் சேர்க்கப்பட்ட 75 மில்லயன் ரூபா பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 26 குற்றச்சாட்டுக்களை விமல் மீது சுமத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு, அவற்றை நிரூபிப்பதற்காக 32 சாட்சிகள், 13 ஆவணங்கள் மற்றும் 40 தடயப் பொருட்களின் பட்டியலையும் நீதிமன்றில் சமர்பித்துள்ளது.

விமலால் சட்டத்துக்கு புறம்பாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேற்படி சொத்துக்களில் வீடு, வாகனங்கள் மற்றும் பணம் ஆகியன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.