வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவி தெரிவிற்கான வாக்கெடுப்பிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் விடயத்தில் சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படாமல் பிளவுப்பட்டுக்கொள்வது பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடாக கருதப்படும்.
ஜனாதிபதி தெரிவிற்கு பலர் போட்டியிட தீர்மானித்துள்ளதால் எவருக்கும் ஆதரவு வழங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
இருப்பினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தனிப்பட்ட ரீதியில் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கும்,கடந்த மூன்று மாத காலமாக ஸ்தாபிக்கபட்ட அரசாங்கங்களிலும் தொடர்ந்து அமைச்சு பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டதை அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமில்லை, ஆதரவு வழங்கும் தீர்மானம் கட்சியின் உயர்மட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு, அத்தீர்மானம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுசெயலர் குறிப்பிட்டார்.

