பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள பெயரை சபாநாயகருக்கு இன்று அறிவிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி

286 0

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

அதற்கமைய எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் பதவிக்கான பெயரை சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கேட்டுக் கொண்தற்கு இணங்க புதிய பிரதமர் தொடர்பில் ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதற்கமைய புதிய பிரதமர் பதவிக்காக முன்மொழியப்படவுள்ள பெயரை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகரிடம் அறிவிப்போம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் குழுவினர் டலஸ் அழகப்பெருமவை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , ஏனைய கட்சிகளும் வெ வ்வேறு பெயர்களை இதற்காக பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.