ஜனாதிபதி மாளிகையிலிருந்து 17 மில்லியன் ரூபாவை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

229 0

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட 17 மில்லியன் ரூபா பணத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கையளித்ததாக பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை ஆரப்பாட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் பெருமளவான பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து 17 மில்லியன் ரூபா மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.