இலங்கை மின்சாரசபையின் கட்டணங்களை அதிகரிப்பதை தாமதப்படுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

206 0

இலங்கை மின்சாரசபையின் கட்டண அதிகரிப்பினை தாமதித்துள்ளமையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நாட்டின் நாணயக்கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விலை சூத்திரத்தின் அடிப்படையில் செயற்பட ஆரம்பித்துள்ள போதிலும் மின்சாரசபையின் கட்டண அதிகரிப்பை தாமதித்துள்ளமை காரணமாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கான பண வரவு பாதிக்கப்பட்டுள்ளது அவர்களிடம் டொலர்களை கொள்வனவு செய்வதற்கான ரூபாய்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் திறைசேரியிடமிருந்து பணத்தை கோருகின்றனர் இதன் காரணமாக அவர்கள் மத்தியவங்கியை பணத்தை அச்சடிக்குமாறு கோருகின்றனர் எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை நட்டத்தை சந்திக்கின்றது ஆனால் அதன் கட்டணங்களை அதிகரிப்பது தாமதமாகியுள்ளது,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எண்ணையை விற்பனை செய்கின்றபோதிலும் இலங்கை மின்சார சபையிடமிருந்து போதுமான ரூபாய்கள் அதற்கு கிடைக்கவில்லை எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திறைசேரியிடமிருந்து 217 பில்லியன் ரூபாயினை கோரியுள்ளது,ஆகவே அவர்கள் மத்திய வங்கியிடம் கேட்கின்றனர் கட்டண அதிகரிப்பை உரிய நேரத்தில் செய்யாததன் விளைவை நாங்கள் அனுபவிக்கின்றோம்,இந்த சீர்திருத்தங்களை நாங்கள் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.