எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று டோக்கன்களை கேட்காதீர்கள் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

246 0

எரிபொருள் கப்பல் குறிப்பிட்ட தினத்தில் நாட்டை வந்தடையாது என்ற அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரமே பதிவு செய்து சிட்டைகளை (டோக்கன்) வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்று சிட்டைகளைக் கோரவோ அதற்காக காத்திருக்கவோ வேண்டாம் என்று வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களை கேட்டு;க் கொண்டார்.

வலுசக்தி அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி நாட்டுக்கு வரவிருந்த கப்பல் வருகை தராது என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் , மக்களை அநாவசியமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று அறிவித்தோம். அத்தோடு அதுவரையிலும் அதற்கு முன்னரான சில தினங்களாகவே வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரம் பதிவு செய்து சிட்டைகளை (டோக்கன்) வழங்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அதற்கமைய வரிசைகளில் உள்ளவர்களை அங்கிருந்து அனுப்புவதற்கும் , வரிசைகள் நீளாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது தவறான முறைமைக்குள் சென்று , ஏற்கனவே வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு சிட்டைகளை வழங்கி நிறைவு செய்து, புதிதாக இணைபவர்களுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாம் வழங்கிய ஆலோசனை இதுவல்ல.

இவ்வாறு சிட்டைகளைப் பெறுவதற்காக ஒன்று கூட வேண்டாம் என்று கோருகின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் முறையான வழிமுறையொன்றின் கீழ் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குச் சென்று சிட்டைகளைக் கோர வேண்டாம். அதுவல்ல முறைமை. எரிபொருள் கப்பல் வராது என்று அறிவிக்கப்பட்ட தினத்தன்று வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு மாத்திரமே சிட்டை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்போது அது துரதிஷ்டவசமாக வேறு வியாபாரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று கருப்பு சந்தைகளில் 1000 – 2000 வரை எரிபொருட்களை விற்பனை செய்கின்றனர். பதுக்கி வைத்திருக்கும் எரிபொருளை விற்பனை செய்கின்றனர். சிலர் அதனை பயன்படுத்துகின்றனர். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படாத போதிலும் வாகன பாவனை பெருமளவில் குறைவடையவில்லை என்றார்.