ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு டாக்டர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த விளக்கம் சிகிச்சை குறித்த சந்தேகங்களை போக்குவதற்கு பதிலாக மேலும் அதிகரித்திருக்கிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சசிகலாவின் உறவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக அவரது இல்லத்தில் வைத்து எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது?. ஜெயலலிதாவுக்கு செப்டிசீமியா தாக்குதல் இருந்தது அப்போதே தெரியுமா? தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதாவுக்கு வீட்டில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன்?.
ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் உள்ளிட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மாரடைப்பு மட்டும் ஏற்படாவிட்டால் வீடு திரும்பி இருப்பார் என்றும் ஓரிடத்தில் ரிச்சர்டு பீலே கூறினார். மற்றொரு இடத்தில் செப்சிஸ் கிருமித் தொற்று இதயத்தைத் தாக்கியதால்தான் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். ரிச்சர்டு பீலே கூறும் இந்த இரு விஷயங்களும் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் காரணமாக சில அடி தூரம் நடக்கும் அளவுக்கு ஜெயலலிதா தேறியிருந்தார் என்று டாக்டர் பாபு ஆப்ரஹாம் கூறியுள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதல்–அமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய அப்பல்லோ நிர்வாகம் தவறியது ஏன்? என்ற வினாவும் கூடுதலாக எழுகிறது.
ஜெயலலிதாவின் உடலில் இருந்த காயங்கள், அவரது கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்த சந்தேகங்களுக்கும் டாக்டர்கள் அளித்துள்ள விளக்கம் மனநிறைவு அளிக்கும்படியோ, ஏற்றுக்கொள்ளும் வகையிலோ இல்லை.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த ஆணையிடுவது தான். எனவே, அத்தகைய விசாரணைக்கு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

