இன்று உலக சமூக ஊடக தினம்

241 0

மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது ஊடகங்கள். செய்திதாள்கள், தொலைக்காட்சிகளை விட சமூக ஊடகங்கள் மூலம் செய்திகள் விரைவாக மக்களை சென்றடைகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் புகைப்படம் அல்லது வீடியோவுடன் அடுத்த மூலைக்கு கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன.

சமூக ஊடகங்கள் என்பவை இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக், டிண்டர் போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றில் லிங்டுஇன், வைன், ஸ்நாப்சாட் போன்றவை தொழில்ரீதியான சமூக ஊடகங்கள் ஆகும். இந்த காலத்தில் வாழும் மக்கள் வாழ்வில் சமூக ஊடகங்கள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இது தொலைதூரத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பேச உதவியாக உள்ளது. அவர்கள் பேஸ்புக், டுவிட்டர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் போராட்டங்கள் முனைப்பு கொள்ளும் வேளைகளில் சிறிலங்கா அரசாங்கம் சமூக ஊடகங்களை முடக்குவதை வழமையாக கொண்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களுக்கான அணுகுவதற்கு 36 மணி நேர கட்டுப்பாட்டை சிறிலங்கா அரசு விதித்தது.

இது தொடர்பான ஊடரங்கு உத்தரவின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு பொது வீதி, பூங்கா, ரயில்கள், அல்லது கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியும் பல இடங்களில் செயலிழந்தது. இவை “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று ஒரு செல்பேசி பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை அரபு கால பாணி என்று சமூக ஊடக பயனர்கள் பரவலாக விமர்சித்தனர்.

 நாமல் ராஜபக்ச சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கை விமர்சித்து வெளிப்படையாகவே தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான அவர், “முற்போக்கான முறையில் சிந்தியுங்கள்” என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN வசதி இருந்தால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அது முற்றிலும் பயனற்றதாக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காகச் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், அது பகிரப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக ஊடக அணுகல் வசதியை இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை மீண்டும் வழங்கியது.

முன்னதாக, சமூக ஊடக அணுகலுக்கான வசதி முடக்கப்பட்டதை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. இது மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் “முக்கிய அம்சம்” என்றும், “பாரம்பரிய ஊடகங்களைப் போலவே முக்கியமானது” என்றும் கூறியது.

“பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின்” அடிப்படையில், சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துமாறு சேவை வழங்குநர்களைக் கோருவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRCSL) “அதிகாரம் இல்லை” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது,

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்துச் சுதந்திரத்தை “நசுக்கும் வகையில்” அரசாங்கத்தின் செயல்பாடு இருப்பதாக கடுமையாக சாடினார்கள்.

சமூக ஊடகங்களின் பாதிப்புகளுக்கு  சமூகம் தீர்வு காண வேண்டிய சூழ்நிலையில் அதனை கல்வி முறை அங்கீரித்து இந்த மின்னிலக்க உலகில் இளையர்களிடன் மனப்போக்கில் மாற்றத்தை உருவாக்கி, திறன்களை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.