தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது ஒன்றாரியோ உயர்நீதிமன்றம்

256 0

கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஒன்றாரியோ உயர்நீதிமன்றம், இது உலகமகாயுத்தம் மற்றும் ஏனைய சர்வதேச மட்டத்திலான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையிலான மாகாணக்கல்விக்கொள்கையை ஒத்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் அறிவூட்டல் வாரச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அச்சட்டமூலத்தின் பிரகாரம் மேமாதம் 12 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும். தமிழினப்படுகொலை தொடர்பிலும் உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

;அச்சட்டமூலம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் மூன்று புலம்பெயர் அமைப்புக்கள் அதனை நீக்கவேண்டுமெனக்கோரி ஒன்ராரியோ உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தன.

அவ்வமைப்புகளில் ஒன்றான இலங்கை கனேடிய செயற்பாட்டுக் கூட்டிணைவு என்ற அமைப்பு, தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் ‘தமிழனப்படுகொலை’ என்ற விடயம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களால் எவ்வித ஆதாரங்களுமின்றி உருவாக்கப்பட்ட தவறான கருத்தியலாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் அறிவூட்டல் மற்றும் நினைவுகூரல் ஆகிய நோக்கங்களுக்காக தமிழினப்படுகொலையை அங்கீகரித்து சட்டம் வகுப்பதற்கு அனுமதிவழங்கி ஒன்றாரியோ உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இது உலகமகாயுத்தம் மற்றும் ஏனைய சர்வதேச மட்டத்திலான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையிலான மாகாணக்கல்விக்கொள்கையை ஒத்ததாகும் என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தமிழ்மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பு என்றும் கனேடிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் புலம்பெயர் தமிழ்மக்களும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.