தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

21 0

இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்திருந்த ஜோய், இந்தக் கலை குறித்து ஆழமான புரிதலுடையவர்.

அதையொரு அறிவியல் கலையாக வளர்த்துச் செல்வதிலும், நம் பண்பாட்டு விடயங்களை சர்வதேச அரங்குகளின் முன் கொண்டு செல்வதிலும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்.

பொது ஊடகங்களில் அதிகம் தோன்றாத ஜோய் முதன்முதலில் Tattoo கலை குறித்து பேசினார்.

இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது? என்கிற வழமையான கேள்வியை அவரிடம் கேட்டால், “ஆர்வம் திடீர் என்று வரவில்லை. சிறுவயதில் இருந்தே ஓவியங்கள் வரைவேன். அது 2002 சமாதான காலப்பகுதி. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது இரு வேறு சீருடையில் இருப்பவர்கள் சமாதான நோக்கில் கைகுழுக்கிக்கொள்ளும் ஒரு ஓவியத்தை வரைந்திருந்தேன். அது அதிகம் பிரபலமாகியது. அத்தோடு எனக்கு ஓவியம் வரைதலின் மீது ஓர் ஆன்ம பிடிப்பு நிகழ்ந்தது.

தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு - வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

 

அதன்பின் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழக அகதி முகாம் ஒன்றில் இருந்தோம். எனது அண்ணா கண்ணாடியில் ஓவியம் வரைவது பற்றி கற்றிருந்தார். அகதிமுகாமிற்கு வரும் தொண்டு நிறுவன பணியாளர்களைக் கெளரவிக்க Glass painting பரிசளிப்பது வாடிக்கையாக இருந்தது.

அந்தச் சந்தர்ப்பத்திலும் ஓவியம் மீது ஈர்க்கப்பட்டேன். பின்னர் பொழுதுபோக்கிற்காக படங்கள் வரைவது, படங்களை டிஜிட்டல் முறையில் மினிமலிஸ்டாக மாற்றுவது, எடிட் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டேன்.

கல்லூரி முடித்தபின் மீண்டும் இந்தியா போயிருந்தபோது Tattoo கலைஞர் ஒருவருடைய கலையகத்தில் சிறிதுகாலம் உதவியாளராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்து இது குறித்துக் கற்கத் தொடங்கினேன்.

நாடு திரும்பியதும், நண்பர்களுடன் இணைந்து இந்தக் கலையை என் முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டேன். அதுவே என்னை இவ்வளவு தூரத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது” – அவருக்கு கிடைத்த கேள்விநேரத்தில் தன் முழுவரலாற்றையும் சுருக்கமாக சொல்லி முடித்தார் ஜோய்.

இதிலிருக்கும் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியும் இதுமாதிரியான விடயங்களில் கேட்கப்படுவதுதானே. அதற்கும் ஜோய் பதில் தந்தார்.

தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு - வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

“ஆம். ஒரு Tattoo கலைஞனாக இதில் உள்ள சவால்களை மூன்று விதமாக சொல்ல விரும்புகிறேன். முதலாவது மிக ஆபத்தானது. அதாவது ஒருவர் மூலம் இன்னொருவருக்குத் தொற்றும் நோய்கள் பற்றியது. உடலின் மேற்பரப்பைத் துளைக்க பயன்படுத்தும் ஊசிகள் புதிதாக இருப்பது மட்டுமல்ல, Tattoo வரையும்போது ஒருவர் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் படும் வாய்ப்புள்ள அத்தனை கருவிகளையும்/உபகரணங்களையும் ஒவ்வொரு முறையும் மாற்றவேண்டும்.

Tattoo வரைந்துகொள்ளும் இந்தச் செயல்முறையின்போது வேறு எந்த பொருளையும் தொடக்கூடாது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு நோய்கள் தொற்ற அதிகளவு வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்காணிக்க – நெறிப்படுத்த, வளர்நத நாடுகள் தனியான கட்டமைப்புகளை வைத்திருக்கின்றன.

இரண்டாவது சவால், சில நாடுகளில், பிரதேசங்களில் குறிப்பிட்ட சில Tattooக்கள் வரைந்து கொள்வது பாரிய சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக இலங்கையில் புத்தரின் உருவத்தை தனது காலில் tattooவாக வரைந்துகொண்ட ஒருவர் தாக்கப்பட்டமை சர்ச்சையானது. அதேபோல மலேசியாவில் எண்களை வரைந்துகொள்வது சிக்கலை ஏற்படுத்தும். அரபு நாடுகள் சிலவற்றில் இஸ்லாமிய மதம் ரீதியான tattooக்களை வரைவது குற்றமாகும்.

மூன்றாவது சவால், சமூகக் கட்டமைப்பு சார்ந்தது. நமது சமூகத்தில் உடலில் வரைந்து கொள்ளும் இந்தக் கலையை ஒவ்வாத ஒன்றாக பார்க்கும் நிலை இன்னமும் இருக்கவே செய்கிறது. ஆனால் இதன் தொடக்கம் தமிழர்களிலிருந்துதான் ஆரம்பித்து, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு - வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

 

இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை நமது தமிழ் சமூகத்தில் இலைகளின் பச்சையங்களை மூலமாக வைத்து செய்யப்படும் பச்சை குத்தும் முறைமை இருந்தது. பின்னர் சமூகத்திற்கு ஒவ்வாத ஒன்றாக உருவகப்படுத்தி இப்போது அழிவுக்கு சென்றுவிட்டது.

உலகின் பழமையான பூர்வகுடிகள் வாழும் இடங்களில் எல்லாம் உடலில் நிரந்தரமாக வரைந்து கொள்ளும் இந்தக் கலை விரவி இருக்கிறது. நியூசிலாந்தின் பூர்வகுடியினரைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவர்களது பண்பாட்டை பிரதிபலிக்கும் Tattooக்களுடன் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அவுஸ்திரேலிய பூர்வகுடிகள், ஆபிரிக்க பூர்வகுடிகள், கரீபியன் மக்கள் என உலகின் பழமையான கலாசாரங்கள் அனேகமானவற்றில் உடலில் வரையும் கலை முக்கிய ஒன்றாக இருக்கிறது. நம்பிக்கைக்குரியதொன்றாக இன்னமும் இருக்கின்றது.

ஆனால் நாம் நம்மிடமிருந்த பச்சை குத்துதலைத் தொலைத்துவிட்டு, நாகரீகம் எனும் பெயரில் Tattooவை இறக்குமதி செய்திருக்கிறோம்.” என இந்தக் கலையில் இருக்கின்ற சவால்களோடு சேர்த்து, அதன் வரலாற்றுக் கனதியையும் சொல்லிடுகிறார் அவர்.

Gallery Gallery