உக்ரைன் அகதி குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை ஏலம் விட்டு ரூ.808 கோடி வழங்கிய ரஷ்ய பத்திரிகையாளர்

104 0

 ரஷ்யாவைச் சேர்ந்த டிமித்ரி முரடோவ் (60) என்பவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையான சுமார் ரூ.3.80 கோடியை மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக வழங்கினார்.

இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை ஏலம் விடப்போவதாக கடந்த மார்ச் மாதம் முரடோவ் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஹெரிடேஜ் என்கிற நிறுவனம் அவருடைய பதக்கத்தை ஏலம் விட்டது. இதில் அவருடைய நோபல் பதக்கம் 103 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.808 கோடி) ஏலம் போனது. அத்தொகை முழுவதையும் உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதாக டிமித்ரி முரடோவ் அறிவித்துள்ளார்.