ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும்

15 0

“நாடாளுமன்ற முறைமையிலேயே தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அதேபோன்று நிறைவேற்று அதிகார முறைமையினாலேயே ஸ்ரீ எழுத்து நீக்கப்பட்டது.எனவே, நிறைவேற்று அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்லவர்களிடமிருந்தால் சில வேளைகளில் எமது மக்களுக்கு நன்மையாக இருக்கலாம்.

கோட்டாபய போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான அதிகாரம் இருப்பதனாலேயே நாங்கள் இன்று அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) என்று தெரிவித்துள்ளார் .

மேலும், எமது மக்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்காது 21ஆவது திருத்தத்தை ஆதரிக்கவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை

“நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட நிலைமை சம்பந்தமாகவும் பேசவேண்டியுள்ளது. உண்மையில் உணவுப் பொருட்களுக்கு மாத்திரமல்ல உணவை உற்பத்தி செய்யும் மூல பொருட்களான எரிபொருளுக்கும் மிகவும் தட்டுப்பாடான நிலை இருக்கின்றது.

ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும்: கோவிந்தன் கருணாகரன் நிபந்தனை

ஒட்டுமொத்த நாட்டிலும் தட்டுப்பாடு நிலவினாலும் விவசாயத்தை மீன்பிடியை நம்பியிருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கின்றது. தற்போது அறுவடை நடைபெறவிருக்கின்றது.

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. எரிவாயுப் பிரச்சினையால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடான நிலையில் ஒவ்வொருவருடைய வீட்டிலும் அடுப்பு எரிவதற்குக்கூட சிரமமாக இருக்கின்றது.

இந்தநிலையில் நீண்ட வரிசைகளைத்தான் ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டின் நிலைமையைப் பொறுத்தமட்டில் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பொருளாதார நிலைக்கு முழுமுதல் காரணமானவர்.

அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிக்காக வருமான வரியை மிகவும் கூடுதலாகக் குறைத்தார். 8 சதவீதத்துக்குக் கொண்டுவந்தார்.விவசாய நாடான இலங்கையின் இரசாயன உர இறக்குமதியை நிறுத்தினார்.

2 வருடங்களுக்குள் இந்த நாடு எப்படியிருக்கும் என்பதனைச் சிந்திக்காத மடத்தனமானதொரு ஜனாதிபதியாக சர்வதேச நாயண நிதியத்தை நாடாதிருந்தார். அந்தவகையில் இந்த நாடு இப்படியானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் இன்று சிக்கியிருக்கின்றது.

‘கோட்டா கோ ஹோம்’ என்று நாடு முழுவதிலுமே போராட்டங்கள் வெடித்தன. பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகும் அளவுக்குப் போராட்டம் உக்கிரமடைந்தது. அவர் விலகியவுடன் இந்த நாட்டை மீட்டெடுப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார்.

அவர் பதவியேற்றதும் போராட்டக்காரர்கள் உரத்த குரலில் கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகத்தான் பிரதமர் பதவியை ஏற்றதாகக் கூறினார்கள். கிட்டத்தட்ட அது உண்மைபோலவே தற்போது இருக்கின்றது.

ஏனென்றால் பிரதமராக ரணில் பதவியேற்று 2 மாதங்களாகிவிட்ட போதும் நாட்டில் எந்தவிதமான மாற்றமுமில்லை. பொருளாதார நெருக்கடி கூடிக்கெண்டே செல்கின்றது. சில வேளைகளில் அனைத்துக் கட்சிகளின் கூட்டு அரசு ஏற்பட்டிருந்தால் சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் உதவி செய்திருப்பார்கள்.

தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்த ஒருவர் பிரதமராகப் பதவியேற்ற காரணத்தால் சஜித் பிரேமதாஸவினது அணி அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஜே.வி.பி அணியும் ஆதரவு கொடுக்கவில்லை.

இதர கட்சிகளும், ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூடுதலான உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு கொடுக்காத நிலையில், இன்று சர்வதேசத்தின் ஒரு நம்பிக்கையான பிரதமராக அவர் இருப்பார் என்று நினைத்துக்கெண்டிருந்தாலும் கூட சர்வதேசம் அவரரை நம்பி இந்த நாட்டுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் பொளாதாரம் வர வர மிக மோசமடைந்து கொண்டு செல்கின்றது. ரணிலின் உரைகள் கூட இரண்டு மாதங்களுக்குத்தான் உணவு இருக்கின்றது, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இன்றுதான் இறுதி எண்ணெய்க்கப்பல் வருகின்றது என்கின்றார்.

இவ்வறான அறிவுறுத்தல்களால் மக்கள் மேலதிகமாக எரிபொருளை, உணவுப்பொருட்களைச் சேகரிப்பதனால் பெரும் நெருக்கடியை இந்த நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்காலத்திலும் இதைவிட அதிகமான நெருக்கடியைச் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் ஒரு விலைக் கட்டுப்பாடு இல்லாதமையால் நாட்டிலுள்ள பெரு முதலாளிகள் தொடக்கம் சிறு வியாபாரிகள் வரை பொருட்களின் விலைகளை அவரவர் நினைத்தபடி நிர்ணயிக்கின்றமையால் மக்களின் கஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே வருகின்றது.

கோட்டபாய ராஜபக்சவை நம்பி சர்வதேசம் ஒருபோதும் உதவி செய்வதாக இல்லை. நாட்டின் அரசில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போதிருக்கின்ற நிலைமையை விட மோசமாகச் செல்லும் என்பதுதான் தற்போது வெளிப்படையாக இருக்கின்றது.

தற்போது அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கதைகள் இருக்கின்றன. இந்த 21ஆவது அரசமைப்புத் திருத்தத்தினால் எமது மக்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இதற்கு எட்டு திருத்தங்களுக்கு முன்பு வந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக்கொண்டு வரப்பட்ட சட்டமூலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.

அதனூடாக இந்த அரசு அரசியலமைப்பை மீறுகின்றதாகவே கருதப்படுகின்றது. 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு சாராருக்கு இருக்கின்றது.

இந்த 21ஆவது திருத்தச் சட்ட வரைபிலும் அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருப்பதாகக் கூடக் கூறியிருக்கின்றார்கள். ஆனால், இந்த 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைக் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயக முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறான நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கும்போதுதான் பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் இந்த நாடாளுமன்ற ஜனநாயக முறைமையிலே கிழித்தெறியப்பட்ட வரலாறுகளே இருக்கின்றன.

நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறை 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினாலேயே முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த ஸ்ரீ பிரச்சினை இரவோடு இரவாக நாடாளுமன்றத்துக்குச் சட்டமூலம் கொண்டு வரப்படாமல் நிறைவேற்று அதிகார முறையால் இல்லாமலாக்கப்பட்ட வரலாறும் உண்டு.

எனவே, நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்வர்களின் கைகளில் இருந்தால் சில வேளைகளில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம்.

ஆனால், கோட்டபய ராஜபக்ச போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற காரணத்தினாலேதான் நாங்கள் இன்று அந்த அதிகார முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.இந்த நிலைப்பாட்டினால் எமது மக்களுக்கு என்ன பயன் என்பதையும் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும்.

நிபந்தனை

21ஆவது திருத்தச் சட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் 13ஆவது திருத்தச் சட்டத்துக்குள் இருக்கும் அதிகரங்களை முழுமையாகப் பரவலாக்க வேண்டும் என்ற திருத்தம் 21ஆவது திருத்தச் சட்டத்துக்குள்ளே உள்வாங்கப்பட வேண்டும்.

அதற்கும் மேலாக நிதி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்கின்ற சரத்துக்கள் கூட 21ஆவது திருத்தச் சட்டத்துக்குள் வரவேண்டும். இன்று அரசும், அரசுக்குள் இருப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களை இங்கு முதலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள்.

அவர்கள் முதலீட்டுக்காக் கொண்டு வரும் பணத்துக்கு இங்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இங்கு மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்ட மாகாண சபைகளினூடாக அந்த அந்த மாகாணங்களிலே முதலீடுகளைச் செய்வார்கள்.

புலம்பெயர் தேசங்களிலே தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் கூட தனவந்தர்களாக இருக்கின்றார்கள். அவர்களும் அவர்களது மாகாண அரசுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து அந்த அந்த மாகாணங்களுக்குரிய நிதியைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து முதலிடுவார்கள்.அவ்வாறாக மாகாணசபைகளுக்குரிய நிதி அதிகாரங்கள் கூட 21ஆவது திருத்தச் சட்டத்தாலே கொண்டு வரப்பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் தங்கள் நிதிகளை அவர்கள் விரும்பியவாறு பாதுகாப்பாக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நாட்டுக்குத் தேவையான அளவுக்கு ஏன் தேவைக்கு மேலதிகமாகவும் டொலர்களைக் கொண்டு வருவதற்குரிய சாத்தியம் ஏற்படும்.

எனவே, 21 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக நாங்கள் இருந்தால் இவ்வாறான விடயங்கள் அதில் உள்வாங்கப் படவேண்டும் என்பது என்னுடைய உறுதியான நிலைப்பாடு”என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.