மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்: ஜெ.தீபா

309 0

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந் தேதியன்று புதிய கட்சி தொடங்க உள்ளார். இதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது ஆதரவாளர்களை சந்தித்து, அவர்களுடைய வாழ்த்துகளை பெற்று வருகிறார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஜெ.தீபாவை சந்திப்பதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு காலை முதலே அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ஜெ.தீபா மாலையில் தொண்டர்களை சந்தித்து, வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசியதாவது:-

என்னை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. தமிழக மக்களின் சுதந்திரம் இழந்ததுபோல் ஒரு சூழல் தற்போது உருவாகி உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும்.

இதில் மக்களுக்கு எந்த வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம். நாட்டுக் காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் ஆட்சி செய்யலாம்.

‘புரட்சி தலைவி’ (ஜெயலலிதா) என்ற பெயர் அழிந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை. உங்களுக்காக நான் தொடர்ந்து பணி செய்வேன். நீங்கள் விரும்பும் குரலை உயர்த்தி உறுதியாக இருங்கள்.

நிச்சயமாக நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நிழலைக்கூட யாரும் தொட முடியாது. அதற்கு நானும் விடமாட்டேன். ஜனநாயகம், மக்களாட்சி மலரவேண்டும் என்பதற்காக நான் துணை நிற்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.