ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

151 0

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான டேன் பியசாத் தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மேலும் 5 சந்தேக நபர்களை சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் வெடித்தன. இந்த சம்பவங்களில் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.