225 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள கோரிக்கை

113 0

ஜனாதிபதி என்ற தனிநபரைச் சுற்றி அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளமையே நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் , பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படக் காரணமாகும்.

எனவே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை விரைவில் நடைமுறைப்படுத்தி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான தேசிய பொறுப்பினை நிறைவேற்றுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களிமும் கேட்டுக் கொள்வதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் மக்கள் மனங்களில் கோபமும் விரக்தியும் அதிகரிக்கும்

இவ்வாறு வரிசைகளில் காத்திருப்பதால் மக்களுக்கு தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

இவ்வாறு முடங்கியுள்ள மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குள்ள ஒரே வழிமுறை அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதேயாகும்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாமல் ஒருபோதும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியாது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டால் மாத்திரமே வரிசை யுகத்தினையும் நிறைவுக்கு கொண்டு வர முடியும்.

ஜனாதிபதி என்ற தனிநபரைச் சுற்றி அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளமையே இவ்வாறு அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் , பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படக் காரணமாகும்.

இந்த சர்வாதிகார ஆட்சி முறைமையை இல்லாதொழித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்குள்ள ஒரே வழிமுறை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தினை உடனடியாக நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்துவதாகும்.

அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒரே விடயம் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மாத்திரமேயாகும்.

எனவே இந்த தேசிய பொறுப்பினை நிறைவேற்றுமாறு 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.