யாழ். காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் : உடற்கூற்றுப் பரிசோதனையில் கொலையென அறிவிப்பு

340 0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை , கீரிமலையில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 42 மற்றும் 62 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கீரிமலை , புதிய கொலனியில் வசிக்கும் 63 வயதான ச . நடராசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிடப்பட்டது.

முதியவரின் கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலினால் உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டது .

5 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.