சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?

115 0

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் கப்பலை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால், அநாவசியமாக எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுப்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று நேற்றிரவு முதல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாது.

இதனால் தேசிய மின்வாரியத்தின் திறன் 45 சதவீதத்தில் இருந்து சுமார் 30 சதவீதமாக குறைவடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீர் மின்சாரம் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.