6 மாதங்களுக்குள் 25 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் : கட்டுப்படுத்தாவிடில் மரணங்கள் அதிகரிக்கும்

120 0

நாட்டில் தற்போது வரையான 6 மாத காலத்திற்குள் 25 000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது 2020 ஆண்டுடன் ஒப்பிடும் போது இரு மடங்கு அதிகரிப்பாகும்.

எனவே உரிய முறையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அதனால் பதிவாகக் கூடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார் ,

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) ;நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2020 இல் 31 000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் இவ்வாண்டில் இந்த 6 மாத காலத்திற்குள் 25 000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2020 உடன் ஒப்பிடும் போது இரு மடங்கு அதிக டெங்கு நோயாளர்கள் இவ்வாண்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் டெங்கு நோயால் அதிகளவான மரணங்கள் பதிவாகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.
எனவே டெங்கு நோய் தொடர்பில் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு , நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் சுகாதாரத்துறையினருக்கு உதவ வேண்டும்.

அரசாங்கத்தினால் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
இந்த விடுமுறை தினத்தை டெங்கு ஒழிப்பிற்காக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 5 யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகளவு டெங்கு நோயாளர்கள் காணப்படும் பிரதேசங்களை இனங்கண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

அத்தோடு டெங்கு நோய்க்கான சிகிச்சைகள் தொடர்பில் உரிய நிபுணர்களுடன் கலந்தாலோசிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் தெளிவுபடுத்தி , டெங்கு நோயால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்ட வேண்டும் உள்ளிட்ட 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.