சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் மந்தபோசணைக் குறைபாட்டிற்கு உடனடித்தீர்வு அவசியம்.

191 0

இலங்கையில் சிறுவர்களைப் பொறுத்தமட்டில் மந்தபோசணைக் குறைபாடானது மிகமுக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது.

தற்போது அவர்களுக்குரிய உடனடி உதவிகள் வழங்கப்படாத பட்சத்தில், பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் பல வருடகாலமாக அடைந்துகொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மீண்டும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என்று யுனிசெப் அமைப்பு எச்சரித்திருக்கின்றது.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அடுத்துவரும் 7 மாதங்களில் அதிகரிக்கக்கூடிய சிறுவர்களின் தேவைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு 1.7 மில்லியன் சிறுவர்களுக்கு அவசியமான போசணை, சுகாதாரம், தூயகுடிநீர், கல்வி மற்றும் உளநலசேவை உள்ளிட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு கடந்த வாரம் யுனிசெப் அமைப்பு கோரிக்கைவிடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தாம் அறிமுகப்படுத்தவுள்ள சிறுவர்களை முன்னிறுத்திய மனிதாபிமான உதவிச்செயற்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தி தமது அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் சார்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே யுனிசெப் அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை பல தசாப்தகாலத்தின் பின்னர் இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

பெற்றோர்கள் வீடுகளிலுள்ள தமது பிள்ளைகள் தொடர்பில் கவலையடைந்தவாறு எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பல மணித்தியாலங்களை நீண்ட வரிசைகளில் செலவிடுகின்றார்கள்.

மின்வெட்டு தொடரும் நிலையில், சிறுவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

பல்பொருள் அங்காடிகள் வெறுமையடைந்திருப்பதுடன் (பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக) அரிசி, பால்மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துசெல்கின்றன. இவற்றின் காரணமாக சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எமது அமைப்பின் மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையில் 2.3 மில்லியன் சிறுவர்கள், அதாவது இரண்டுக்கு ஒன்று விகிதத்திலான சிறுவர்கள் போசணை, சுகாதாரம், தூயகுடிநீர், கல்வி, உளவளசேவை உள்ளிட்ட ஏதேனுமொரு வகையிலான அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சிறுவர்கள் மீதான மோசமான பின்விளைவுகளுடன் இந்த நிலைவரம் மேலும் மோசமடையும்.
சிறுவர்களைப் பொறுத்தமட்டில் மந்தபோசணையானது முக்கிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. பெருமளவான சிறுவர்கள் பசியுடனேயே உறங்கச்செல்கின்றார்கள். இது ஏற்கனவே தெற்காசியாவில் 5 வயதிற்குக் குறைந்த சிறுவர்களில் மந்தபோசணையுடையோரின் எண்ணிக்கையை உயர்வாகக் கொண்டிருந்த நாடாகக் காணப்பட்ட இலங்கை மேலும் பாதிப்படைவதற்கு வழிவகுக்கும்.

சுமார் 4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வி சமநிலையில் காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோர் வசிக்கும் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களின் வீதம் குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்திருப்பதாக எமது அமைப்பைச் சார்ந்த குழு அறிக்கையிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச்சேவையின் கிடைப்பனவில் ஏற்பட்டுள்ள சிக்கல், மின்வெட்டு, கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையின்மை என்பனவே இதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இதனால் பிற்படுத்தப்பட்ட பெருமளவான சிறுவர்கள் போசணைமிக்க உணவைப் பெற்றுக்கொள்ளும் ஒரேயொரு மார்க்கமாகக் காணப்பட்ட பாடசாலை உணவு வழங்கல் செயற்திட்டமும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் அவசர சிகிச்சைப்பிரிவிலும், உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகளின்போதும் பயன்படுத்தப்படும் மருந்து உள்ளடங்கலாக சிறுவர்களுக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்கும் அவசியமான சுமார் 25 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் அடுத்த 2 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இந்த நெருக்கடி பாதுகாப்புடன் தொடர்புடைய தீவிர கரிசனைகளையும் தோற்றுவித்திருக்கின்றது. இலங்கையில் தற்போது 10,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஏதேனுமொரு கட்டமைப்பின் கண்காணிப்பின்கீழ் இருப்பதுடன், அதற்குப் பிரதான காரணம் வறுமையாகும்.

அங்கு குடும்பத்தின் அரவணைப்பு கிட்டாது என்பதனால், அவை சிறுவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற இடமல்ல. அவ்வாறிருக்கையில் தற்போதைய சூழ்நிலையில் அந்தச் சிறுவர்களின் நிலை மேலும் மோசமடைவதுடன், அவர்களுக்குரிய உணவு மற்றும் கல்வித்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான இயலுமையை அந்தக் கட்டமைப்புக்கள் கொண்டிராத நிலை காணப்படுகின்றது.

நாம் இப்போது காலத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். உடனடி உதவிகள் வழங்கப்படாத பட்சத்தில், பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் பல வருடகாலமாக அடைந்துகொள்ளப்பட்ட முன்னேற்றம் மீண்டும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.