சசிகலாவின் ரகசிய திட்டங்களை முறியடிக்க அதிமுக மூத்த தலைவர்கள் இன்று தீவிர ஆலோசனை

279 0

அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியான கட்சி நிர்வாகிகள் தேர்தல் சட்ட திட்ட விதி 30 பிரிவு 2-ன் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தபட வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019-ம் ஆண்டு கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அந்த கால கட்டத்தில் கொரோனா பரவியதால் தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்கட்சி தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

முதலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் கமிஷனிலும் அ.தி.மு.க. தலைமை சமர்ப்பித்தது.

கட்சி சட்ட திட்ட விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கட்சி நிர்வாகிகள் பட்டியலுக்கு செயற்குழு, பொதுக் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. சிறப்பு அழைப்பாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை. கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார்.

தேர்ந்தெடுக்கப்படாத பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை பங்கேற்க வைத்தால் அதில் சசிகலா ஆதரவாளர்கள் யாராவது கட்சிக்கு விரோதமாக கருத்துக்களை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயலக்கூடும் என நினைப்பதால் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா ஆதரவாளர்கள் போலி உறுப்பினர்கள் போர்வையில் பங்கேற்று ஒற்றை தலைமை கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இதுபற்றி விவாதிப்பதற்கும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை இறுதி செய்வதற்காகவும் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள். அது மட்டு மல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி ‘மினிட்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையி டப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்க படக்கூடும் என தெரிகிறது. உயர் மட்டக்குழுவின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், செயல் தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 9 பேர், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 9 பேர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவாக உயர்மட்டக்குழு மாற்றி அமைக்கப்பட கூடும். பொதுக்குழுவில் இது தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.