தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர் ஷாபி

249 0

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.

வைத்தியர் ஷாபி பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.

தற்போது நாட்டில் கடும் நெருக்கடியில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக தமது சம்பள நிலுவையை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி வழங்கியுள்ளார்.

பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி, வைத்தியர் ஷாஃபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.