அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது – வாசுதேவ நாணயக்கார

162 0

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிப்பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தகுதியற்றவர் என்ற ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

21ஆவது திருத்தத்தில் இரட்டை குடீயுரிமையுடைய நபருக்கு தடை விதிக்கும் வகையிலான திருத்தத்தை இரத்து செய்ய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததை தொடர்ந்தே அவர் 21ஆவது திருத்தம் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெரும்பாலான அதிகாரங்கள் பாராளுமன்றிற்கு வழங்கப்பட வேண்டும்

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களாணையுடன் தெரிவு செய்யபபட்டவரல்ல,ஆகவே பிரதமர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்துவது சிக்கல் தன்மையானது . அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்து செய்ய அவதானம் செலுத்த வேண்டும்.

மாகாணசபை முறைமை ,தேர்தல் முறைமை குறித்து முரண்பாடற்ற தீர்மானத்தை மேற்கொண்டதன் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்ஷர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள்.  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி பதவி விலகுவது சாத்தியமற்றது.நாட்டு மக்களின் போராட்டம் பெரும்பாலும் வெற்றிப்பெற்றுள்ளது