தக்கலை அருகே சிக்கலை உருவாக்கும் திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு

265 0

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆளும் திமுக அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களின், இறை நம்பிக்கையாளர்களின் பெருமையை, பொறுமையை, சகிப்பு தன்மையை சோதித்துக் கொண்டிருக்கிறது.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க குமார கோவில் என்ற முருகன் கோவிலில் வைகாசி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறையின் சட்டத்திற்கும், ஆகம விதி முறைகளுக்கும் முரணாக, இறை நம்பிக்கையில்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட திமுகவினர் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்த போது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களை மிரட்டி பக்தர்களை விரட்டி சீருடைய அணியாத காவல்துறையினரை பயன்படுத்தி, வடம் பிடித்து இழுத்த திமுகவினர், இரண்டு தேர்களையும் நகர்த்தி, தெருவிலேயே நிறுத்தி விடடுச் சென்று விட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக போராடிய பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மதச்சார்பின்மை என்ற பெயரில் ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மறுபக்கம் தமிழரின் பாரம்பரிய மரபுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவது ஆட்சிக்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.