இராணுவ வீரர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

137 0

கம்பளை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை டிப்பர் வண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் வண்டிக்கு எரிபொருளை நிரப்பிய பின்னர், சம்பந்தப்பட்ட நபர், வண்டியை வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, இரண்டு கலன்களில் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்துள்ளார்.

அப்போது கலன்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என இராணுவ வீரர் கூறியுள்ளதுடன் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த நபர் , இராணுவ வீரரை தாக்கியுள்ளார். இந்த நிலையில், .இராணுவ வீரர் தன்னையும் தாக்கியதாக கூறி, வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸார் சந்தேக நபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சுக்கு எதிரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பிரதான நுழைவு கதவை உடைத்துக்கொண்டு அமைச்சுக்குள் செல்ல முயற்சித்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக நாராஹென்பிட்டியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த தலங்கம பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.