மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மின்னுற்பத்திக்கான செலவை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் சிறந்த திட்டங்களை செயற்படுத்தாவிடின் மக்கள் இனி அரசியல்வாதிகளின் வீடுகளை அல்ல அரச அதிகாரிகள் வீடுகளை தாக்குவார்கள் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ; சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் 09 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
எரிபொருள் பற்றாக்குறை, மின் விநியோக தடை ஆகிய காரணிகளினால் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
பொருளாதார பாதிப்பு,பூகோளிய தாக்கங்கள் மற்றும் வங்கி கட்டமைப்பு கடன் பற்று பத்திரங்களை விநியோகிப்பதை தவிர்த்துள்ளமை ஆகிய காரணிகளினால் எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் விலைமனுகோரலுக்கு புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் எரிபொருளை வழங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பணம் கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.கடந்த ஐந்து மாதகாலமாக இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது.
எரிபொருள் கொள்வனவிற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்காமலிருந்திருந்தால் நிலைமை பாரதூரமானதாக அமைந்திருக்கும்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் தற்போது 90 யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சிறந்த யோசனைகளை ஆராய்ந்து நீண்டகால கொள்கைத்திட்டத்திற்கமைய ஒரு விநியோக தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தின் போது மின்சாரத்துறை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.24 மணித்தியாலங்களும் தடையின்றிய வகையில் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மேலதிகமாக 100 மில்லியன் டொலர் அவசியம் என இலங்கை மின்சார ; சபை அறிவுறுத்தியுள்ளது.புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 65 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதுடன் ,கடந்த செப்டெம்பர் மாதம் முதல் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 22 பில்லியனாக அதிகரித்துள்ளது.ஆகவே மின்சார சபையின் கடன் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.வருடாந்த மின்னுற்பத்தியின் போது 750 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்வதாகவும்,மின்கட்டண அறவீடு ஊடாக வருடாந்தம் 250 பில்லியன் ரூபா கிடைக்கப்பெறுவதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.மின்சார சபை வருடாந்தம் எதிர்க்கொள்ளும் 500 பில்லியன் நட்டத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின் மின்கட்டணத்தை நூற்றுக்கு 300 -400 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.
மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மின்னுற்பத்திக்கான செலவுகளை குறைப்பது பொருத்தமானதாக அமையும்.நிலக்கரி,எரிபொருள் ஆகியவற்றின் ஊடான மின்னுற்பத்திக்கான செலவு நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தி சக்தி வள பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து ; எரிபொருள் பெற்றுக் கொள்வதை அரசாங்கம் தவிர்த்து வருவதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.
குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள எத்தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள தயாராகவுள்ளோம். எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்ய தூதுவருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளேன்.
ரஸ்யா அரசாங்கம் என்ற ரீதியில் எரிபொருள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது.எரிபொருள் தொடர்பில் ரஸ்யாவின் நான்கு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் 2 நிறுவனங்கள் எரிபொருள் தொடர்பிலான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதிலளித்துள்ளார்கள். விலைமனுகோரல் இல்லாமல் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

