உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒருவருக்கு பிணை

121 0

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்டடு தடுத்துவைக்கப்பட்டிருந்த கண்டியைச் சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் இன்று (08) பத்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் விடுவித்துள்ளார்.

சஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2019.05.04 ஆம் திகதி கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த இவருக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இவர் சார்பாக சட்டத்தரணி இஸ்மாயீல் உவைஸுல் ரஹ்மான் ஆஜராகி இவரை பிணையில் விடுவிப்பதற்கான முன்நகர் பத்திரம் கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டு இன்று (08) வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி என்.எம். என் . அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிரிக்கு பிணை வழங்க சம்மதம் தெரிவித்ததையடுத்து பத்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை, வெளிநாடு செல்லத்தடை ஆகிய நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.