நஞ்சுண்டகண்டனை சிந்தைகொள்வோம்!

288 0

நஞ்சுண்ட கண்டனின் இலக்கை அடைவது எப்போது என்று தமிழீழ மாணவ மற்றும் இளைய தலைமுறை சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சிங்களக் காவல்துறையிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற ஓர்மத்துடன் சைனயிட் அருந்தித் தன்னை அர்பணித்து மிகப்பெரும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் தீப்பொறியாகச் சுழன்றடித்து விடுதலைப் போருக்கு ஒரு புதிய உத்வேகத்தை அழித்த நாளாக யூன் மாதம் 6ஆம் நாள் அமைந்துள்ளது. அந்நாளையே தமிழீழ மாணவர் எழுச்சி நாளாகத் தமிழீழ மாணவர்களும் மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

யாழ். இந்துக் கல்லூரியில் பொன். சிவகுமாரன் உயர்தரம் கற்ற காலத்திலேயே இலங்கையில் கல்வித் தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற காலப்பகுதியில் தமிழர்கள் கல்வியில் மேம்பட்ட நிலையில் இருந்ததோடு, தீவினது நிர்வாக சேவைகள் முதல் அனைத்து நிலைகளிலும் ஆளுமை கொண்டோராகவும் திகழ்ந்தனர். இதனை உவப்பாகக் கருதாத சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரது கல்வியில் கை வைத்தனர். அதனை நடைமுறைப்படுத்தத் தரப்படுத்தல் முறையை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியது.

ஒரு நாட்டின் குடிமக்களான தமிழ் மக்களது கல்வியைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையானது தமிழ் மாணவரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனை எதிர்கொள்ளும் வகையிற் “தமிழ் மாணவர் பேரவை” தோற்றம் பெற்றது. அதனோடு முழுமையாக இணைந்து பொன்.சிவகுமாரன் அவர்கள் செயற்பட்டார்.

1974ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இலங்கையை ஆண்ட சிங்கள ஆட்சியாளரால் பல்வேறு தடைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டதோடு, மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதைக் கண்டு பொறுக்கமுடியாது மாநாட்டின் நிறைவு நாளில் 11 உயிர்ப் படுகொலைகளோடு பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தனர். அக்காலப் பகுதியில் சிறிமாவோ தமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆண்டகாலம் என்பதையும் மனம் கொள்ளல் வேண்டும். பொன்.சிவகுமாரன் அவர்கள் ஒரு தொண்டராகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு 1974ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குத் தன்னாலான அத்தனை செயற்பாடுகளிலும் மாநாடு நடைபெற்ற 9 நாட்களும் தன்னை அர்பணித்துச் செயலாற்றினார். ஒரு மாணவனாக இருந்தபோதும், தனது இனநலன் சார்ந்து மிகவும் எழுச்சிமிகு முற்போக்கான சிந்தனை கொண்டவராகவே அவரது செயற்பாடுகள் வரலாறாகியுள்ளது.

விடுதலைக்குப் போராடும் இளையோரைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த உரும்பிராய் நடராசா மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றதோடு, விடுதலை ஒன்றே தணியாத தாகமாக வரித்துக்கொண்ட செயற்பாட்டாளருமாவார். 05.06.1974ஆம் நாளன்று உரும்பராயில் காவல்துறையாற் சுற்றிவளைக்கப்பட்டபோது சையினைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவர் வீரச்சாவடைந்த 5ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக இருந்தமையால் யூன் 6ஆம் நாளைத் தமிழீழவர்கள், தமிழீழ மாணவர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நாளில் இவரை நினைந்து வணங்குவது மட்டுமா எமது கடமை என இளையோர்கள் சிந்திக்கவேண்டியது காலமிடும் கட்டளையாகும். இவரது செயற்பாடுகளின் வலிமையை வல்லமையாக வரித்துக்கொண்டு தாய்நிலத்திலும், தமிழகத்திலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மாணவர்களும் இளையோரும் திட்டமிட்ட இன அழிவுக்குள்ளாகும், இனமென்றவகையிலே அம் மக்களது வாழ்வையும் விடுதலையையும் மீட்கும் வரலாற்றுக் கடனேற்று செயற்படச் சிந்தை கொள்ளவேண்டும். 26.09.1950 அன்று உரும்பிராயில் பிறந்து 05.06.1974அன்று வீரச்சாவைத் தழுவிய வேளையில் 23வயதேயான துடிப்புமிகு இளைஞனே தமிழீழ வரலாற்றில் முதற் தற்கொடையாளருமாவார்.

இன விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரீந்த தற்கொடையாளனே உன் நினைவேந்திக் கடன் தொடர நின் வல்லமை வேண்டி நிற்கின்றோம்.