ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையிலேயே 21 ஆவது திருத்தம்

350 0

பல ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியுள்ள கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்கி சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் அவதானம் செலுத்தப்படவில்லை.

ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்தார்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் புதன்கிழமை (1) மாலை கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரையினை ஒரு சதத்திற்கேனும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டு மக்கள் முழுமையான அரசியல் முறைமை மாற்றததை கோருகையில் 21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவதை தொடர்ந்து நாட்டில் மீண்டும் ‘இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய’தன்மையே தோற்றம் பெறும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் 2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட பல திருத்த வரைபுகளை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாக கொண்டு வந்திருக்கலாம்.

நாடு பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் விரைவான அரசியலமைப்பிற்கு செல்வது அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்டை பிரச்சினைகளுக்கு  21 ஆவது திருத்தம் ஊடாக தீர்வு காண முடியாது.

அரசமைப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் தன்மை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இரட்டை குடியுரிமை கொண்ட நபர் பாராளுமன்றிற்கு மாத்திரமல்ல நகர சபை உறுப்பினராக கூட தெரிவு செய்யப்பட கூடாது.

இரட்டை குடியுரிமை தொடர்பில் தற்போது கவனம் செலுத்துபவர்கள் கடந்த காலங்களில் சிங்கப்பூர் நாட்டு பிரஜையை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்ததை மறந்து விட்டார்கள்.

ஆகவே அரசியலமைப்பு திருத்தம் விவகாரத்தில் ஒருதரப்பு நிலைப்பாட்டிற்கு மாத்திரம் முக்கியத்துவம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது.சுயாதீன ஆணைக்குழுக்களுக்க தெரிவாகும் நபர்களின் சுயாதீனத்தன்மை தொடர்பில் முரண்பட்ட தன்மை காணப்படுகிறது

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலான திருத்தங்கள் ஏதும் புதிய அரசியலமைப்பு திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.