கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு ; நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன விடுத்த உத்தரவை ; ரத்து செய்து ‘ ரிட் ‘ ஆணை ஒன்றினை ( எழுத்தாணை) பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் இந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இம்மனு தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்குமாறு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று ( 02) மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் ; மா அதிபர் மற்றும் சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு உத்தரவிட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், குறித்த ரிட் மனு பரிசீலிக்கப்பட்ட போது இதற்கான அறிவித்தல் இன்று பிறப்பிக்கப்பட்டது.
;இன்று மனு பரிசீலனைகளின் போது, மனுதாரர்களான ; முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ மன்றில் ஆஜரானார். இதன்போது அவர் மனுதாரர் சாபில் வாதங்களை முன் வைத்தார்.
அண்மையில் ரம்புக்கனையில் எரிபொருள் கோரி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், சமிந்த லக்ஷான் எனும் இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்த மரண பரிசோதனைகள் கேகாலை நீதிவான் நீதிமன்றில் நடந்தது. அந்த பரிசோதனைகளின் நிறைவில் துப்பாக்கிச் சூடு ; நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவு சட்டத்துக்கு முரணானது. ; ரிட் மனுதாரர்கள் ( சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்டோர்) குற்றம் புரிந்துள்ளதாக நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்த வல்ல எந்த சான்றுகளும் இல்லாத நிலையில், நீதிவான் அவ்வாறு உத்தரவிட்டமை சட்டத்துக்கு முரணானது.
எனவே அந்த உத்தரவை மையப்படுத்தி எனது சேவைப் பெறுநர்களை பொலிசார் கைது செய்தமையும், அவர்களை விளக்கமரியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவும் கூட சட்டத்துக்கு முரணானது.’ என ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ வாதிட்டார்.
;இதன்போது மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபருக்காக ; சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார ஆஜரானார். ; இந்த ரிட் மனுவின் மனுதாரர்களை, கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய, கேகாலை நீதிவான் விடுத்த உத்தரவு முற்றிலும் சட்ட ரீதியிலானது என அவர் வாதிட்டார்.
;குறித்த சம்பவம் தொடர்பிலான ஸ்தல மேற்பார்வைகள், மரண பரிசோதனை, சாட்சிப் பதிவுகளை நீதிவான் முன்னெடுத்திருந்த நிலையில், ; அதனூடாக மன்றுக்கு முன் வைக்கப்பட்டிருந்த விடயங்கள், சாட்சியங்களை மையப்படுத்தி ; அவர், ; கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ரிட் மனுதாரர்கள் கோரும் படியாக ஆணை வழங்கினால் அது நீதிமன்ற உத்தியோகத்தர்களை அதைரியப்படுத்தும் நடவடிக்கையாக அமையும். என சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார கூறினார்.
இதன்போது மன்றில் பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது பொலிசாரால் தற் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்டது எனும் வாதத்தை ஏற்க முடியாது. ஏனெனில் பொலிசார் சம்பவத்தின் பின்னர் சாட்சிகளை அழிக்க முயற்சித்தனர். ‘ என சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையிலேயே இந்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

