ஐக்கிய மக்கள் சக்தியின் 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனில் , 19 ஆவது திருத்தம் மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதனை விடுத்து ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்படுமெனில் அதற்கு ஆதரவளிக்க வேண்டிய தேவை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது சகாக்களுக்கு வழங்கிய வரி சலுகையால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சுமை மீண்டும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. எனினும் உயர் வருமானம் கொண்ட வர்க்கத்தினருக்கும் , குறைந்த வருமானம் கொண்ட வர்க்கத்தினருக்கும் சம அளவில் வரியை அறவிட எடுத்துள்ள தீர்மானம் பொறுத்தமற்றது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த வரி அறவீட்டு முறைமையின் காரணமாக பல்பொருள் அங்காடிகள் செலுத்தும் வரிக்கு சமாந்தரமாக கிராம புறங்களிலுள்ள சில்லறை கடைகளும் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடைமுறைகள் ஊடாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியாது.
மாறாக எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நாடு வழமைக்கு திரும்ப வேண்டும். அதன் பின்னர் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் பட்சத்தில் படிப்படியாக நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆனால் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கான 3 – 4 பில்லியன்களைக் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
அவ்வாறெனில் அவருக்கு காணப்படும் சர்வதேச தொடர்புகளால் என்ன நன்மை? இன்னும் 3 மாதங்கள் சென்றாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினால் நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்க முடியாது.
மக்கள் ஆணைக்கு அமைய ஸ்திரமானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே சர்வதேசம் இலங்கைக்கு உதவ முன்வரும்.
ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனில், 19 ஆவது திருத்தம் முழுமையாகக் கொண்டு வரப்பட வேண்டும். அதில் காணப்படும் எந்தவொரு விடயமும் நீக்கப்படக் கூடாது.
ஆனால் தற்போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆம் திருத்தத்திற்கும் 20 இற்கும் பெரியளவில் மாற்றங்கள் இல்லை. எனவே அதற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது.
அதே போன்று இரட்டை குடியுரிமை விவகாரமும் 19 இல் உள்ளதைப் போன்றே மீள நிறைவேற்றப்பட வேண்டும். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவர்கள் கூட இரட்டை குடியுரிமையுடையவர்களாக இருக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
<p>காரணம் அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுனராக நியமித்தமையால் என்ன நடந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
எனவே 21 ஆவது திருத்தமானது பஷில் ராஜபக்ஷவை மாத்திரமின்றி சகல ராஜபக்ஷாக்களையும் அரசியலிலிருந்து முற்றாக நீக்கும் வகையிலேயே அமைய வேண்டும் என்றார்.

