திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்

302 0

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும். சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல, அது சிறையை விட கொடுமையானது. மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் ஆகும். கடந்த காலங்களில் பல முறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இன்று வரை விடுதலை செய்யவில்லை.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.