யாழ். நூலகம் எரிந்த நிமிடத்தில் உயிரை விட்ட அருட்தந்தை!

416 0

ஒரு மனிதனுடைய இனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நாகரீகமற்ற மனிதர்கள் உருவாகி இருப்பதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை எனவும், நல்ல மனம் உள்ள மனிதனுக்கு அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரும் சிறந்த கலைஞருமான தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிவார்ந்த சமூகத்தை நாம் உருவாக்க வேண்டாமா?. நான் ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன். அண்மையில் நான் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கி இருந்தேன். அதனை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்று மொழிப் பெயர்த்து முழு பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த நேர்காணலிம் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். அதில் நான் இரண்டு விடயங்கள் பற்றிக் கூறி இருந்தேன்.

நாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும். இனத்தைப் பற்றி இனவாத மமதையில் நான் பேசுவேனாக இருந்தால் , அவ்வாறு பேசும் ஒவ்வொரு மனிதனும் இந்த விடயத்தை மறக்கக்கூடாது.

90,000 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த நூலகத்திலிருந்து 90,000 புத்தகங்களையும் வெளியிலே இழுத்துப் போட்டு அவற்றுக்குத் தீயிட்டு எரித்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் வசித்த இளைஞர்கள் , அதேபோல் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டு இங்கிருந்த மாணவர்களும், யாழ்ப்பாணத்திற்கு புகையிரத்தில் சென்று அந்நூலகத்திலிருந்த புத்தகங்களைப் படித்து பரீட்சைக்குத் தோற்றி இருக்கின்றார்கள்.

அந்த நூலகத்தில் இருந்த 90 ஆயிரம் புத்தகங்களைத் தீ வைப்பது என்பது எவ்வளவு மிலேச்சத்தனமான செயல்?. 90 ஆயிரம் புத்தகங்கள் எரிக்கப்படுகின்றபோது கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தான் நின்று கொண்டிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் இருந்தவாறு, இன்னுமொரு கிறிஸ்தவ அருட்தந்தை சிங்கராயர் தாவீதை தொலைபேசி ஊடாக அழைத்து வானத்தில் ஏதோ புகைமண்டலம் எழுகின்றது.

ஏதோ எரிவது போல் தெரிகின்றது என்ன நடக்கின்றது? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த அருட்தந்தை “ஏன் பாதர் உங்களுக்கு தெரியாதா? யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குத் தீ வைத்துவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

இதனை கேட்ட அருட்தந்தை சிங்கராயர் தாவீது கையில் தொலைபேசியை வைத்துக் கொண்டு அப்படியே மரணித்த நிலையில் உட்காருகின்றார்.

இந்த நாட்டில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிந்து விட்டது என கேள்விப்பட்டதும் உயிர்துறந்த ஒரே மனிதர் அவர். அவருடைய பெயர் பாதர் டேவிட். 1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து புத்தகங்களை அந்நூலகத்தில் சேகரித்து வைப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்ட ஒரு அருட்தந்தை அவராவார்.

இதனையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது. அதேபோல் கடந்த வருடம் நாங்கள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை கண்டோம். அவருடன் இரண்டு சிங்களப் பொலீஸார் இருந்தனர். வெடிச்சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இறந்துபோனார். அவ்வாறு இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய சார்ஜன்ட் மரணித்த நேரத்தில் அவருடைய மனைவி அங்கு வந்தார்.

அங்கு வருகின்றபோது நீதிபதி இளஞ்செழியன், மரணித்தவருடைய மனைவியின் கைகளைப் பிடித்து தேம்பித் தேம்பி அழுது கால்கள் இரண்டையும் பிடித்துக் கும்பிட்டு வணங்கினார். இவ்வாறு வணங்கியவர் தமிழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். வணங்கியது சிங்களப் பெண்ணொருவரை. நாங்கள் அதனை பிரித்துப் பார்க்க வேண்டியது இந்த இடத்தில் அல்ல, இதுவே தேசிய நல்லிணக்கம்.

இதுவே தேசிய ஐக்கியம் என்பதும். அந்த மனிதனுடைய வேதனை புரிந்தது. என்னை பாதுகாக்கவிருந்த சிங்கள பொலிஸ்காரர் தானே இறந்து போனார். பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவியின் கால்களை பிடித்து அழுதார். உங்களுக்கு தேவையென்றால் வலையெளி தளத்தில் அதனை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். இவற்றையே நாம் சமூகமயப்படுத்த வேண்டும்.

நீதிபதி இளஞ்செழியன், பொலிஸ் உத்தியோகஸ்தரின் இரண்டு பிள்ளைகளை தானே வளர்ப்பதாக கூறி பொறுப்பேற்றுக்கொண்டார். நான் பிள்ளைகளை பார்க்க சிலாபம் செல்கிறேன் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது என அண்மையில் பத்திரிகை ஒன்றிடம் கூறியிருந்தார்.

அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் பிள்ளைகள் 8 பாடங்களில் ஏ சித்தியை பெற்றிருந்தன. அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இரண்டு பிள்ளைகளை இளஞ்செழியன் என்ற மேல் நீதிமன்ற நீதிபதியை படிக்க வைக்கின்றார்.

இதனை புரிந்துக்கொள்ளுங்கள் என்று நாம் நாட்டில் உள்ள இனவாதிகளுக்கு கூற வேண்டும். இதுதான் நல்லிணக்கம் என்பது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை. நல்ல மனம் உள்ள மனிதனுக்கு அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தர்மசிறி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.