எந்தவொரு சந்தேகநபருக்கும் தாம் சட்டத்தரணி ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்குமான உரிமை இருக்கின்றது.
இருப்பினும் அட்டுலுகம சிறுமி படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு ஆதரவாகத் தாம் ஆஜராகப்போவதில்லை என்று எந்தவொரு சட்டத்தரணியேனும் கூறியிருந்தால், அது அவர்களுடைய தனிப்பட்ட தெரிவு மாத்திரமேயாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம பிரதேசத்தைச்சேர்ந்த 9 வயதான சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் அச்சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக ஆஜராகாமல் இருப்பதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்திருப்பதாக வெளியாகியிருந்த செய்தியொன்றை மேற்கோள்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.
‘குற்றமிழைக்காத நிரபராதி என்ற கருதுகோளுக்கு வரல், தன்னைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற சட்ட அதிகாரியொருவரைக் கொண்டிருப்பதற்கான உரிமை உள்ளடங்கலாக நியாயமான வழக்கு விசாரணைக்கு உட்படுவதற்கான உரிமை என்பன குற்றவியல் சட்டக்கட்டமைப்பின் அடிப்படைகளாகும்
அதனைப் புறக்கணிப்பதென்பது மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பிகா சற்குணநாதனின் அப்பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் செய்திருக்கும் மீள்பதிவிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது முழுமையான பதிவு வருமாறு:
‘நான் அம்பிகா சற்குணநாதனின் கருத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். எந்தவொரு சந்தேகநபருக்கும் தாம் சட்டத்தரணி ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்குமான உரிமை இருக்கின்றது.
இந்த உரிமையானது எந்தவொரு வழிமுறைகளிலும் பின்தள்ளப்படக்கூடாது. ஆனால் அட்டலுகம சிறுமி படுகொலை விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு ஆதரவாகத் தாம் ஆஜராகப்போவதில்லை என்று எந்தவொரு சட்டத்தரணியேனும் கூறியிருந்தால், அது அவர்களுடைய தனிப்பட்ட தெரிவு மாத்திரமேயாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

