சஷி வீரவன்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை

182 0

குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பொய்யான  தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் அதற்கு ; எதிராக அவர் முன் வைத்துள்ள மேன் முறையீட்டைஅடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேன் முறையீட்டு  கோரிக்கையை  இன்று ( 31) பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை அறிவித்தார்.

அதன்படி 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், ; 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல  இதன்போது நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்தது. இதனைவிட இரு மாதங்களுக்கு ஒரு தடவை  சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், வெளிநாட்டு பயணம் தடை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம்  பிணை உத்தரவில் அறிவித்தது.

கடந்த மே  27 ஆம் திகதி, தண்டனை அறிவிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக மேன் முறையீட்டு கோரிக்கை சஷி வீரவன்ச சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷ கெக்குணவல அதனை ஆராய்வதை மே 30 வரை ஒத்தி வைத்திருந்தார். அதன்படி நேற்று ( 30) இந்த மேன் முறையீட்டு கோரிக்கை, கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் பரிசீலனைக்கு வந்த போது மனு இன்று ( 31) வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில், இன்று மேன் முறையீட்டு கோரிக்கை பரிசீலிக்கப்பட்ட போது சஷி வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி  தண்டனைக்கு எதிராக அவர் மேன் முறையீடு செய்துள்ள பின்னணியில், அவரை மேன் முறையீட்டு விசாரணைகள் நிறைவுறும் வரையில்  பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

இந் நிலையில் சஷி வீரவன்ச இதற்கு முன்னர் நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளியாக காணப்பட்டிருக்காமை, அவருக்கு எதிராக நிலுவை வழக்குகள் எதுவும் இல்லாமை  ஆகிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிமன்றம் அவருக்கு பிணையளித்து உத்தரவிட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கும் 2015 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் , கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட கொழும்பில் வைத்து ; குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதி ( ஷஷி வீரவங்ச) டி. 3642817 ; எனும் இலக்கத்தை உடைய முறையற்ற கடவுச் சீட்டினை எந்த சட்ட ரீதியிலான அடிப்படைகலும் இன்றி உடன் வைத்திருந்தமை ஊடாக ; 1993 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கம், 1998 ஆம் ஆண்டின் 42 ஆம்  இலக்கம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ( திருத்தம்) சட்டங்கள் ஊடாக திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட இரு  வழக்குகளில், சஷி வீரவன்ச குற்றவாளியாக காணப்பட்டு இரு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.